வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து 10ஆம் திருநாள்... மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவம் கடந்த 22ஆம் தேதி நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து, நம்பெருமாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இந்த நிலையில், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நச்சியார் திருக்கோலத்தில் ரத்தின கிளி தலையில் நாகாபரணம், பவள மாலை, அடுக்கு பதக்கம், புஜ கீர்த்தி, ஏலக்காய் ஜடை தரித்து நம்பெருமாள் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

srirangam

இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று மாலை 4.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நம்பெருமாள், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  திருக்கொட்டார பிரகாரம் வழியாக கருட மண்டபத்தில் வீற்றிருப்பார். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைவார். 

இதனை தொடரந்து, இராப்பத்து விழாவின் முதல் நாளான நாளை திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 3500 போலீசார் ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.