மகனுடன் வந்து வாக்களித்த வானதி சீனிவாசன்... கோவையில் காலை 11 மணி நிலவரப்படி 17.20 சதவீதம் வாக்குப்பதிவு!

 
vanathi

நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலையொட்டி, கோவை சிஎம்எஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதேபோல், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும், பாஜக மகளிரணி தேசிய செயலாளருமான வானதி சீனிவாசன்,  தனது மகன் ஆதர்ஷ் உடன் கோவை சிஎம்எஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார். 

vanathi

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், நமது ஜனநாய கடமையான வாக்குப்பதிவினை அனைவரும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள்? என ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கூறினார். மேலும், கோவையில் கடந்த சில நாட்களாகவே அத்துமீறல்கள் நடந்து வருகிறது என்றும், வீடு வீடாக பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது என்பது மிகவும் மோசமான செயலாக உள்ளது என கூறிய வானதி சீனிவாசன், இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி மக்கள் நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் வாக்களிக்க வேண்டியது சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும், சில இடங்களில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் விரப்பட்டு உள்ளனர் என்று கூறிய வானதி, காவல்துறையினரும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

voting

கோவை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.60 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருந்தது. இந்த நிலையில், தற்போது காலை 11 மணி நிலவரப்படி 17.20 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.