விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: ஓசூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி!

 
krishnagiri

ஓசூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தலைமையில் காவல் துறை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், அதிரடிப்படை வீரர்கள் என ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். போலீசார் ஓசூர் காந்தி சாலையில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் ஊர்வலமாக சென்றனர். 

krishnagiri

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி சரோஜ் குமார்,  ஓசூரில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இந்து, இஸ்லாமிய அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஓசூர் உட்கோட்ட பகுதிகளில் மத்திகிரி, காந்தி சாலை, தேன்கனிக்கோட்டை, மதகொண்டப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறிந்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். 

மேலும், பதற்றமான பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.