வெல்டிங் பட்டறை உரிமையாளர் தற்கொலை வழக்கு; தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர் கைது!

 
trichy

திருச்சியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் சேகர்(58). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவர் தில்லைநகர் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் தனி நபர் கடன் மற்றும் வீட்டுக்கடன் பெற்று முறையாக தவணை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக சரிவர தவணை செலுத்தாததால், நிதி நிறுவன ஊரியர்கள் சேகர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். மேலும், அவரது செல்பேன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

police

இதனால் மனவேதனை அடைந்த சேகர் கடந்த 31ஆம் தேதி மாலை பாரதிதாசன் சாலை விருந்தினர் மாளிகை எதிரே உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த உயிரிழந்த சேகரின் மனைவி திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணை  மேற்கொண்டனர். அதில், தனியார் நிதி நிறுவன ஊழியர் பெர்லிக்ஸ் சகாயராஜ் என்பவர், சேகரை தகாத வார்த்தைகளால் பேசி தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதனை அடுத்து, பெர்லிக்ஸ் சகாயராஜை போலீசார் கைது செய்தனர்.