ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானை... வாகன ஓட்டிகள் அச்சம்!

 
elephant

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள், கரடி, சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது விலங்குகள், வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

sathyamangalam

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை ஆசனூர் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலாவியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே  தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிகள் செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது, சிறிது நேரம் சாலையில் நடமாடிய அந்த காட்டுயானை பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, கோடைக்காலத்தில் உணவு தேடி வனவிலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் என்பதால் வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கவும், அதிக ஒலி எழுப்பவே, அவற்றை செல்போன்களில் படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.