மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததால் ஆத்திரம்... தொழிலாளியை வெட்டிக்கொன்ற இளைஞர்!

 
murder

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறி தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(36). இவர் கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் இருசக்கர வானத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகலின் பேரில் வத்திராயிருப்பு போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே, மணல் கடத்தியது குறித்து, அதே பகுதியை சேர்ந்த  கூலி தொழிலாளி மாரியப்பன்(53) என்பவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக, முருகன் சந்தேகமடைந்துள்ளார்.

vathirairuppu

இந்த நிலையில், நேற்று மாலை அர்ச்சுனாபுரம் பழைய பள்ளிக்கூடம் அருகே தனது மருமகன் சிங்கராஜுடன், மாரியப்பன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற முருகன், மணல் கடத்தல் விவகாரம் குறித்து கேட்டு தகராறு செய்தார். மேலும், ஆத்திரம் தீராமல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். மேலும், அதனை தட்டிக்கேட்ட மருமகன் சிங்கராஜுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலன்றி நேற்று நள்ளிரவு மாரியப்பன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து,  தப்பியோடிய கொலையாளி முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.