பிரசவமான 3 நாளில் இளம்பெண் உயிரிழப்பு... திருவாரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

 
Death

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவமான 3 நாளில் இளம்பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பரகத்துல்லா. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் பானு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது பர்வீன்பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், பிரசவத்திற்காக அவர் கடந்த 7ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 11ஆம் தேதி அவருக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

thiruvarur

இதனை அடுத்து, தாயும், சேயும் நலமுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், பர்வீன்பானு இன்று காலை உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, அவரது உறவினர்கள் சென்று மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னர் பர்வீன் பானு மயக்கமடைந்துள்ளார். தகவல் அறிந்த மருத்துவர்கள் சென்று பார்த்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த வந்தனர். அப்போது, பர்வீன்பானு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பர்வீன்பானுவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் சமசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.