வையம்பட்டியில் தனியார் பஞ்சாலை பேருந்து மோதி பாதயாத்திரை சென்ற பெண் பலி!

 
accident

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் தனியார் பஞ்சாலை பேருந்து புகுந்ததில் கும்பகோணத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார். மேலும், 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நேற்றிரவு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முள்ளிப்பாடி பகுதியில் தங்கிய அவர்கள், இன்று காலை மீண்டும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர்.

vaiyambatti

வையம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில்  நடந்து சென்றபோது பக்தர்கள் கூட்டத்தில், பின்னால் தனியார் பஞ்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து புகுந்தது. இந்த விபத்தில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி(60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிவகாசி, மாதேஸ்வரி, மூக்காயி ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியான உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.