தேவக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் தொழிலாளி பலி!

 
sivagangai

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தில் பாலாருடைய அய்யனார் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மஞ்சுவிரட்டு பொட்டலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் காளைகளை அடக்க முயன்றனர். 

manjuvirattu

இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 28 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், சிலர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், வேலாயுதப்பட்டினம் அடுத்த மத்தினி கிராமத்தை சேர்ந்த வையாபாண்டி என்பரது மகன் பிரகாஷ்(22) என்பவர், இருமதி மஞ்சுவிரட்டு போட்டியை காண வந்திருந்தார். மாடு வெளியேறும் இடத்தில் நின்றிருந்த அவரை எதிர்பாராத விதமாக காளை ஒன்று முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.