ஆலங்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேர் கைது!

 
alangulam

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கந்து வட்டி கேட்டு கூலி தொழிலாளியை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையம்புளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பச்சமால் பெருமாள் (40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிவலார்குளம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி நந்தகுமார்(25) என்பவரிடம் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக வாரம் ரூ.300 வட்டியாக கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், வட்டியாகவே அவர் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். 

alangulam

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக  பச்சமால் பெருமாள் வட்டி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நந்தகுமார் சென்று தொழிலாளியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் மற்றும் அவரது அண்ணன் முஜித்குமார்(23), உறவினர்கள் பத்திரகாளி(38), ஆறுமுகம் என்கிற ஆனந்த்(40) ஆகிய 4 பேரும் சேர்ந்து பச்சமால் பெருமாளை சரமாரியாக தாக்கினர். 

இதில் அவர் மக்கமடைந்தார். இதனை அடுத்து, அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.