ஆம்பூர் எம்எல்ஏ குறித்து செல்போனில் இழிவாக பேசி ஆடியோ வெளியீடு - வழக்கறிஞர் கைது!

 
ambur

ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதனை செல்போன் உரையாடலில் இழிவாகப் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டு சாதிப்பிரச்சனை தூண்டியதாக திமுக பெண் மாவட்ட கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி ஒன்றாவது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமார். வழக்கறிஞர். அரசு விழாவில் தனது மனைவி சரிதாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி, முத்துக்குமார் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், அவரது மனைவியை இழிவாக பேசி ஆபாச வார்த்தைகளால் வசைபாடி சாதி வெறியை தூண்டும் வகையில் செல்போன் உரையாடலை பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

ambur

இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துகுமாருக்கு சொந்தமாக ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில் உள்ள உணவகங்களை தாக்கி தீவைத்தனர். மேலும், முத்துகுமாரை கைது செய்யக்கோரி நேற்றிரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் உமராபாத் பகுதியில் ஏராளமானோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 7 மணி முதல் சுமார் 2 மணிநேரத்தும் மேலாக நடைபெற்ற போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன், முத்துக்குமாரை கைதுசெய்வதாக உறுதி அளித்தார். அதன் பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, கைலாசகிரி பகுதியில் வீட்டில் இருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை உமாராபாத் போலீசார் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.