பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமர் படம் மாட்டிய விவகாரம்... பாஜக நிர்வாகி கைது!

 
cbe attack

கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை மாட்டியதுடன், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே உள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள், கடந்த 22ஆம் தேதி பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்தனர்.  தொடர்ந்து, அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி அலுவலக சுவரில் தாங்கள் கொண்டுவந்திருந்த பிரதமர் மோடியின் உருவப்படத்தை மாட்டினர். அப்போது, அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றியது மற்றும் மாஸ்க் அணியாமல் வந்தது தவறென அதிகாரிகள் சுட்டிக்காட்டியதால்,  இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

arrest

அப்போது, பேரூராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும் எனவும், பிரதமரின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும் தெரிவித்த பாஜகவினர், அவ்வாறு செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி மாவட்டச் செயலாளர் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர். மேலும், பாஜகவை சேர்ந்த 9 பேர் மீது அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.