சேலம் அருகே தோட்டத்தில் விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி!
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே தோட்டத்தில் விஷப்பூச்சி கடித்ததில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதை. விவசாயி. இவரது 11 வயது மகன் சந்துரு. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுவன் சந்துரு, நேற்று மாலை பில்லாங்குளத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளான்.

அப்போது, தோட்டத்தில் சோளத்தட்டு போரில் இருந்த விஷப்பூச்சி ஒன்று எதிர்பாராத விதமாக சிறுவன் சந்துருவை கடித்துள்ளது. இதனால் அவனது உடலில் ஆங்காங்கே தடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், அவனை உடனடியாக மீட்டு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாப்பட்டான். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவன் சந்துரு பரிதாபமாக உயிரிழந்தான். விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


