கோவையில் இருந்து 21 மாதங்களுக்கு பின் கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்

 
கேரளா

கோவை உக்கடத்தில் இருந்து கேராளவுக்கு 21 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் - கேரளா இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் ரயில்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும் கேரளாவுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில், தற்போது சபரிமலை சீசன் துவங்கியதை அடுத்து, ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்திற்கு அனுமதிக்கும் படி, அம்மாநில போக்குவரத்து அமைச்சர், தமிழக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.  இதனை தொடர்ந்து, தமிழக அரசு இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு நேற்று அனுமதி அளித்தது.

corona virus

இதனை அடுத்து, கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகம் - கேரளா இடையே பேருந்து சேவை துவங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதனிடையே, கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.