பரமத்திவேலூர் அருகே பசுங்கன்றை கொன்ற சிறுத்தையை பிடிக்க கூண்டுவைப்பு... அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு!

 
leopard

நாமக்கல் மாவட்டம் இருக்கூர் அருகே கன்றுகுட்டி, நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் உலாவும் சிறுத்தை ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் பசுங்கன்று குட்டி, 2 நாய்கள் மற்றும் மயில்களை அடித்துக்கொன்றது. இதனால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

leopard

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாந்த் தலைமையில், நாமக்கல் வனச்சரக அலுவலர் பெருமாள் மேற்பார்வையில் 40 பேர் கொண்ட வனப் பாதுகாவலர் குழு அமைக்கப்பட்டு சிறுத்தையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும்,  அந்த பகுதியில்  சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும், 4 மோஷன் சென்சிங் கேமராக்களும் பொருத்தியும், டிரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர். 

leopard

சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம மக்கள் யாரும் மாலையில் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், மிக விரைவில் சிறுத்தை பிடிபடும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.