மணப்பாறை அருகே லாரி மீது கார் மோதி விபத்து - பத்திரிகையாளர் உள்பட இருவர் பலி!

 
accident accident

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் பெரியகுளத்தை சேர்ந்த பத்திரிகையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது அஸ்லாம், அவரது நண்பர் ரியல் எஸ்டேட் அதிபர் அன்னகொடி மாயன் உள்ளிட்ட 5 பேர் நேற்று திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க விழாவுக்கு சென்றனர். தொடர்ந்து, 5 பேரும் நேற்றிரவு சொகுசு காரில் பெரியகுளத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். மணப்பாறை அடுத்துள்ள ஆவாரம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

trichy

இந்த விபத்தில், படுகாயம் அடைந்த பத்திரிகையாளர் முகமது அஸ்லாம் மற்றும் அன்னகொடி மாயன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மற்றும் பத்திரிகையாளர்கள் வேல்முருகன், சிவகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

தகவலின் பேரில் விபத்து பகுதிக்கு வந்த வையம்பட்டி போலீசார், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.