ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு நாளை பிற்பகல் முதல் ஜன.2 வரை செல்ல தடை - ராமநாதபுரம் எஸ்.பி. ஆணை

 
rameshwaram

புத்தாண்டு பிறப்பையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடற்கரை பகுதிகளுக்கு நாளை பிற்பகல் முதல் ஜனவரி 2ஆம் தேதி காலை வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து, மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர். தற்போது, பரவி வரும்  கொரோனா பெருந்தொற்று, உருமாறிய கொரோனா  மற்றும்  ஓமிக்ரான் பரவல் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது.

45

இதனால், நாளை 31ஆம் தேதி பிற்பகல் முதல் ஜனவரி 2ஆம் தேதி காலை வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், அரியமான், காரங்காடு, நரிப்பையூர், மூக்கையூர், சேதுக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.