கோவையில் சிறப்பு காவல் படை ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணியை சேர்ந்த காவல் ஆய்வாளர் செல்வராஜ், தனது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள கரும்முழி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள  தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணியில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். இவருக்கு ராணி ஜுலியட் என்ற மனைவியும், சந்தோஷ், கிறிஸ்டோபர் என 2 மகன்களும் உள்ளனர். சந்தோஷ், ஆவடியில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

suicide

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் சிறப்பு காவல் படை அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஆய்வாளர் செல்வராஜ், பிற்பகல் 2.10 மணியளவில் தனது அறையில் கைலி மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முகாமில் உள்ள காவலர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில், குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வாளர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் செல்வராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.