மாற்றுத்திறனாளி மகளுடன் ஆதரவின்றி தவித்த பெண்... மனு அளித்த 24 மணிநேரத்தில் வீடு ஒதுக்கிய ஆட்சியர்!

 
கரூர்

கரூரில் மாற்றுத்திறனாளி உள்பட 3 மகள்களுடன் ஆதரவின்றி வசித்து வரும் பெண் அளித்த மனுவை பரிசீலித்து 24 மணிநேரத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து ஆட்சியர் பிரபுசங்கர், உத்தரவை வழங்கினார்.

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நேற்று முன்தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர், தனக்கு ஒரு மாற்றுத்திறனாளி மகள் உள்பட 3 மகள்கள் உள்ளதாகவும், ஆதரவின்றி வாழ்ந்து வரும் தங்களுக்கு வசிக்க வீடு இன்றி தவிப்பதாகவும் கூறினார்.

karur

இதனை அடுத்து, அவர்களின் சூழலை அறிந்த அமைச்சர் செந்தில்பாலாஜி,  உடனடியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தரைதளத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், செல்விக்கு, காந்திகிராமத்தில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடிக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.

இதேபோல், போரில் வீரமரணமடைந்த கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த ஹவில்தார் ராஜேந்திரனின் மனைவி தமிழ்செல்விக்கு கிராம நிர்வாக அலவலர் பணிக்கான நியமன ஆணையை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.