திமுகவினர் இடையே கோஷ்டி மோதல் எதிரொலி... அன்னூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

 
annur

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலின்போது திமுகவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பெறும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இதனையொட்டி, இன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் விஜயகுமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விஜயகுமாரை எதிர்த்து மற்றொரு திமுக கவுன்சிலர் பரமேஸ்வரன் என்பவர் போட்டியிட்டார்.

annur

இருவரும் வேட்புமனு தாக்கல் செய்து, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, விஜயகுமார் - பரமேஸ்வரன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி மற்றும் மேசைகள் உடைத்து நொறுக்கப்பட்டது.

இதனை அடுத்து, பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில், இன்று காலை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2-வதாக அன்னூர் பேரூராட்சி தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.