ஊதிய உயர்வு கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்... கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

 
sanitation workers

ஊதிய உயர்வை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.721 ஆக வழங்க, கடந்த ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

cbe

இந்த நிலையில், உடனடியாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை முதல் பணியை புறக்கணித்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சுவார்த்தை நடத்திய போதும், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனை அடுத்து, தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், வட்டாட்சியர் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.