பழங்குடியினர் குறித்து சர்ச்சை கருத்து: வேடச்சந்தூர் எம்எல்ஏ-வை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

 
vedasanthur

பழங்குடியினர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வேடச்சந்தூர் எம்எல்ஏ காந்திராஜனை கண்டித்து வடமதுரையில் நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட வேடச்சந்தூர் தொகுதி எம்எல்ஏ காந்திராஜன், அய்யலூர், பஞ்சம்தாங்கி, மம்மானியூர் பகுதிகளில் உள்ளவர்கள் கல்வியறவின்றி உள்ளதால், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இன்றி உள்ளதாகவும், அவர்களை விலங்குகளுடன் ஓப்பிட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தான் 1991-96ஆம் ஆண்டில் எம்எல்ஏவாக இருந்தபோது 15-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாமை நடத்தியதாகவும் கூறியிருந்தார்.

vedasandhur

எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பழங்குடியின மக்கள் நேற்று வடமதுரை கொம்பேறிபட்டி நான்கு ரோடு பகுதியில் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசிய எம்எல்ஏ காந்திராஜனை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின்போது பெண்கள் சிலர் எம்எல்ஏ காந்தி ராஜன் புகைப்படத்தை தரையில் போட்டு செருப்பால் மிதித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.