நாமக்கல் சிறையில் மாற்றுத்திறனாளி மரணம்; 2 எஸ்.ஐ-க்கள் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்!

 
suspend

நாமக்கல் கிளைச் சிறையில் இருந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் உள்பட 3 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டம் கரூப்பூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி அம்சலா. கடந்த 10ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் கணவன் - மனைவி இருவரையும் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையிலும், அம்சலா சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சிறையில் இருந்த பிரபாகரனுக்கு கடந்த 11ஆம் தேதி காலை திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு  சிகிச்சை பலனின்றி பிரபாகரன்  உயிரிழந்தார். 

slm dead

இதனை அறிந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசார் தாக்கியதால் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி பிரபாகரனை தாக்கிய சேந்தமங்கலம் போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  பிரபாகரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், சேலம் சிறையில் உள்ள அவரது மனைவியை விடுதலை செய்யவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

slm

இந்த நிலையில், சிறையில் இருந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழநத விவகாரத்தில் சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி மற்றும் தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி உத்தரவிட்டு உள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.