தருமபுரியில் பழுதடைந்த 480 பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது - ஆட்சியர் திவ்யதர்ஷினி

 
school building

தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த 480 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய  பழைய கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறையின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை  மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

school demolition

இப்பணிகள் குறித்த காலத்திற்குள்  முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்குழுவை கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள அனைத்து கட்டிடங்களின் உறுதி தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் கடந்த 17 , 18 ஆகிய 2 நாட்களில் பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத  பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் கண்டறியப்பட்டு 98 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள், 49 சத்துணவு மைய  கட்டிடங்கள், 95 சிறு குடிநீர் தொட்டிகள், (2,068 மீட்டர் ) 25 பள்ளி சுற்றுச்சுவர்கள், 202 கழிப்பறைகள், 4 ஆய்வுக்கூட கட்டிடங்கள், 1 உடற்கல்வி  ஆசிரியர் அலுவலக கட்டிடம், 1 அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 6 இதர கட்டிடங்கள் என மொத்தம் 480 பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள், சிறு  குடிநீர் தொட்டிகள், பள்ளி சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன, என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.