ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!
தருமபுரி
கர்நாடக மாநில அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனை அடுத்து, பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 9,500 கனஅடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 5,100 கனஅடி என மொத்தம் 14,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால், அருவிக்கு செல்லும் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தலம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.