அரூரில் அரசுப்பேருந்து மோதி பிளஸ் 1 மாணவர் பலி!
தருமபுரி
தருமபுரி மாவட்டம் அரூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவரது மகன் கண்ணியப்பன் (16). இவர், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், கண்ணியப்பன் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரூர் – சேலம் பிரதான சாலையில் சென்றபோது, கண்ணியப்பன் வாகனத்தின் மீது, எதிரே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கண்ணியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.