திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் கண் முன்னே இளம்பெண் தற்கொலை!
தருமபுரி
தன்னை காதலித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் தாய்மாமன் மகன் வீட்டின் முன்பு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஏ.கொல்லஅள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவரது மகள் ஞானமொழி. இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சென்னையில் பணிபுரிந்து வரும் தாய்மாமன் தங்கவேலுவின் மகன் முரளிதரனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்றும் நம்பி இருந்துள்ளார்.
இந்த நிலையில், முரளிதரனுக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த ஞானமொழி, நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று முரளிதரன் மற்றும் அவரது பெற்றோரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ஞானமொழி, முரளிதரன் வீட்டின் முன்பாக விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், ஞானமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஞானமொழியின் இறப்புக்கு காரணமான முரளிதரன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி, அவரது உடறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர். இதனால் தருமபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.