கோபிச்செட்டிப்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதி பலி!

 
dead body

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கெட்டிச்செவியூர் அரளிமலை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ஆண்டியப்பன்(70). விவசாயி. இவரது மனைவி முனியம்மாள். ஆண்டியப்பன் தனது வீட்டில் ஏராளமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த கோழிகள் சிலவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால், கோழி திருட்டை தடுக்க அவை அடைக்கப்பட்டிருந்த பகுதியை சுற்றி சட்டவிரோதமாக ஆண்டியப்பன் மின் இணைப்பை கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து அவர் குடும்பத்தினருக்கு கூறவில்லை. 

police

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு கோழிகளுக்கு தீவனம் வைக்க சென்ற முனியம்மாள் மீது எதிர்பாராத விதமாக மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற ஆண்டியப்பனும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து, நம்பியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆண்டியப்பனின் மகன் அளித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோழி திருட்டை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி முதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.