கோபியில் மின்வாரிய அலுவலக ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

 
dead

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஓடும் காரில் மாரடைப்பு ஏற்பட்டு மின்வாரிய அலுவலக ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளைத்தை சேர்ந்தவர் அதியமான் (64). இவர் கோபி அடுத்த வேட்டைக்காரன்கோவில் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை அதியமான் வழக்கம் போல் அலுவலகத்தில் இருந்து ஜீப்பில் கோபியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். கோபி - மொடச்சூர் சாலை, வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நெஞ்சை பிடித்த படியே ஜிப்புக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

accident

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி, அந்த வழியாக இருசக்கர வாகன்ததில் வந்த வடுகபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55) மற்றும் அவரது மகள் பானுமதி (23) ஆகியோர் மீது மோதிவிட்டு, அருகில் கொட்டிவைக்கப்பட்டிருந்த கற்களில் மோதி நின்றது. இந்த விபத்தில ரவிச்சந்திரன், பானுமதி ஆகியோர் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவி போலீசார், காயமடைந்த ரவிச்சந்திரன், பானுமதி ஆகியோரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் ஜிப்புக்குள் இறந்த கிடந்த அதியமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.