ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியின்போது வெடி விபத்து: 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்!

 
alangulam

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அடுத்த காளத்திமடம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சக்திவேல், தொழிலாளர்கள் ஆனையப்பபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் அரவிந்த்(21), ராஜலிங்கம், அவரது மகன் மாரிசெல்வம் மற்றும் ஆளங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்டோர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

alangulam

கடந்த  10 நாட்களாக கிணற்றில் இருந்த மண் எடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக டெட்டனேட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும், ஆசிர் சாம்சன், ராஜலிங்கம் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மற்றும் ஆலங்கும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிர் சாம்சன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜாலிங்கமும் உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்தது. ஓப்பந்ததாரர் சக்திவேல், மாரிசெல்வம் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.