கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்... குடோனில் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியீடு!

 
leopard

கோவை குனியமுத்தூர் அருகே குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 3-வது நாளாக தொடரும் நிலையில், சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே. புதூர் பகுதியில் உள்ள பழைய குடோனில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று புகுந்தது. இது குறித்து குடோன் பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர், வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் போலீசார் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பிடிப்பதற்காக குடோனில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

leopad

மேலும், சிறுத்தையை பொறுமையாக காத்திருந்து பிடிக்க முடிவு செய்துள்ள நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில், மூன்றாவது நாளான இன்றும் சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.20 மணியளவில் சிறுத்தை குடோனில் நடமாடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை மாவட்ட வனத்துறையினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். மேலும், குடோனில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 5 கண்காணிப்பு கேமராக்கள் தற்போது வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.