தலையில் மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வு... தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம்!

 
tenkasi deo

தலையில் மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வுசெய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் சுடலை. இவர் கடையம் பகுதியில் உள்ள சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது, அவருக்கு பள்ளி சார்பில் மலர் கிரீடம் அணிவித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி சுடலை மலர் கிரீடத்தை அகற்றாமல், பள்ளி இருக்கையில் அமர்ந்து கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். 

dpi

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனை அடுத்து,  இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தென்காசி மாவட்ட சிஇஒ கபிருக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அவரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்ட அதிகாரியாக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

மேலும், தென்காசி மாவட்ட பொறுப்பு கல்வி அதிகாரியாக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை நேற்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பிறப்பித்து உள்ளார்.