புதுக்கோட்டை ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ஆலத்தூர் நீலியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஆலத்தூர், காஞ்சிராம்பட்டி, சீத்தாப்பட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்கள் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.  வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

jallikattu

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரமுடன் திமிலை பிடித்து தழுவ முயன்றனர். சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி, வீரர்களை அச்சமடைய செய்தன. போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கில், கட்டில், பேன், பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி ஆலத்தூரில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.