புதுக்கோட்டை திருவப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்... 900 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
thiruvappur

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகளும், 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 900 காளைகளும், 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

jallikattu

இந்த போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் எம்எல்ஏ முத்துராஜா, ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

jallikattu

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகள், வீரர்களை அச்சுறுத்தியபடி சென்றன. அப்போது, இளைஞர்கள் தீரமுடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம், ரொக்கப்பணம், கட்டில், பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.