திருச்சி கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்... 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

திருச்சி மாவட்டம் கூத்தைப்பாரில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவ வருகிறது. இதில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 400 காளைகள் பங்கேற்றுள்ளன. இதேபோல், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளனர்.

koothaipar
 
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வாடிவாசல் வழியாக கோவில் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் திறந்து விடப்பட்டன. களத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.

jallikattu

முதலில் திறந்துவிடப்பட்ட 10 காளைகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம், வெள்ளிப்பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.