காலிங்கராயன் தினம் - பவானி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
காலிங்கராயன் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் பவானியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் கி.பி.1270ஆம் ஆண்டு காலிங்கராயன் அணை கட்டும் பணியும், வாய்க்கால் வெட்டும் பணியும் துவங்கியது. சுமார் 12 ஆண்டுகளாக நடந்த இந்த பணி கி.பி.1282 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதனை அடுத்து, தை மாதம் 5ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாய்க்கால் திறக்கப்பட்டது. கடந்த 740 ஆண்டுகளாக தொய்வின்றி பாசனம் தருகிறது காலிங்கராயன் கால்வாய். ஆண்டுக்கு பத்தரை மாதங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் தரும் பாசன திட்டமாக காலிங்கராயன் கால்வாய் உள்ளது.

இந்த நிலையில், கால்வாய் பயன்பாட்டிற்கு திறக்கப்ட்ட தை மாதம் 5ஆம் தேதியான இன்று காலிங்கராயன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு மணிமண்டபத்தில் உள்ள காலிங்கராயன் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு காலிங்கராயன் சிலைக்கு மாலை மணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார், அதிமுக நிர்வாகிகள் விஜயன் என்கிற ராமசாமி, சி.டி. ரவிச்சந்திரன், அருள்ஜோதி கே. செல்வராஜ், தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், தனசேகரன், சக்திவேல், கே.எம். பழனிசாமி, அப்புகுட்டி, தம்பி என்கிற ராமசாமி, பெருந்துறை ஒன்றிய குழு சேர்மன் சாந்தி ஜெயராஜ், ஊத்துக்குளி ஒன்றிய குழு துணைத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


