திருப்பூரில் பிடிக்கப்பட்ட சிறுத்தை, வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது!

 
leopard

திருப்பூரில் கடந்த 4 நாட்கள் போராட்டதுக்கு பின் பிடிக்கப்பட்ட சிறுத்தை, நேற்றிரவு வால்பாறை காடாம்பாறை வனப்பகுதியில் சென்று விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பாப்பாங்குளம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி புகுந்த சிறுத்தை ஒன்னு, அங்கு சோளத்தட்டை  அறுவடை செய்த விவசாயி வரதராஜன், தொழிலாளி மாறன் ஆகியோரை தாக்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேட்டைத்தடுப்பு காவலர் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய சிறுத்தை,  பின்னர் அந்த பகுதியில் இருந்து தப்பியோடியது.

leopard

இதனை அடுத்து, பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டு வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  நேற்று முன்திம் மாலை பொங்குபாளையம் பகுதியில் நாயை வேட்டையாடி கொன்றது. இதனை அடுத்து, திருப்பூர் பெருமாநல்லூர், பொங்குபாளையம், மங்கலம் உள்ளிட்ட 20 சுற்றுவட்டார கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை அம்மாபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோனில் புகுந்த சிறுத்தை அங்கு ராஜேந்திரன் என்பவரை தாக்கியது. இதேபோல், சிறுத்தையை பிடிக்க வந்த பிரேம்குமார் என்ற வேட்டை தடுப்பு காவலரும் காயமடைந்தார். இதனை அடுத்து, வனத்துறையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதனை அடுத்து,  மயக்கமடைந்த அந்த சிறுத்தை கூண்டிற்குள் அடைக்கப்பட்டு, வனத்துறை வாகனத்தில் வால்பாறை எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, சிறுத்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

leopard

பின்னர், நேற்றிரவு வால்பாறை காடாம்பாறை காப்புகாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட சிறுத்தை வனத்தில் விடுவதற்காக கூண்டை திறந்து விட்டனர்.சில வினாடிகள் வெளியே வராமல் இருந்த சிறுத்தை பின்னர் மின்னல் வேகத்தில் காட்டிற்குள் சென்று மறைந்தது. பிடிபட்ட சிறுத்தை ஆண் என்றும்,இதற்கு 4 வயது இருக்கும் என்றும் வனத்துறை தெரிவித்தனர். 70 கிலோ எடையுள்ள அந்த சிறுத்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.