பட்டாசுக்கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளில விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை வெடி விபத்துக்கள் ஏதுமில்லா தீபாவளியாக கொண்டாடும் நோக்கிலும், பட்டாசு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு கடை உரிமைதாரர்கள் அனைவரும், உரிமத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி செயல்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

crackers

மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பட்டாசு இருப்பு வைத்திருத்தல், உரிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதிருத்தல், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட வேறு ஏதேனும் விதிமீறல்கள் ஆய்வின்பொழுது கண்டறியப்படின், தொடர்புடைய பட்டாசு கடைக்கு வழங்கப்பட்ட தடையின்மை சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமதாரர் மீது அரசு விதிமுறைகளின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.