மதுக்கரை அருகே முகாமிட்டுள்ள மக்னா யானை... வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

 
elephant

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா காட்டுயானை, தற்போது மதுக்கரை அருகே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து  கடந்த மாதம் வெளியேறிய மக்னா காட்டுயானை உள்ளிட்ட 2 காட்டுயானைகள் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன. மேலும், காட்டுயானை தாக்கி விவசாயி ஓருவரும் காயமடைந்தார். இதனை அடுத்து, வனத்துறையினர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப்பிடித்து, கடந்த 5ஆம் தேதி  டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ஆம் தேதி விடப்பட்டது. தொடர்ந்து, அந்த மக்னா யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

elephant

இந்த நிலையில், நேற்று முன்திம் இரவு வனத்தை விட்டு வெளியேறிய மக்னா யானை சேத்துமடை கிராமம் வழியாக நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, மன்னூர் ராமநாதபுரம் பகுதியை கடந்த மதுக்கரை சாலையை கடந்து இன்று மோகன் நகருக்குள் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் 8 குழுக்கள் அமைத்து அந்த மக்னா யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குனியமுத்தூர், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் அந்த மக்னா யானை, அந்த பகுதியில் உள்ள டிரம்களில் தண்ணீரை அருந்தியும், மரக்கிளைகளை உடைத்தும் குடியிருப்பு பகுதியில் உலா வந்து கொண்டுள்ளது.  

elephant

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள வீட்டின் சுற்றுசுவரை உடைத்துக்கொண்டு சாலையில் உலா வந்த மக்னா யானை,  பி.கே.புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது வெயில் காரணமாக மக்னா யானை ஒய்வெடுத்து வருவதாகவும், யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.