சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம்... மேட்டுப்பாளையத்தில் ஊர்வலம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்டேர் கைது!

 
mettu

மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவத்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடூர் ஏ.டி.காலனியில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கனமழை காரணமாக தனியாருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள குடிசை வீடுகள் மீது விழுந்தது. இதில் 5 வீடுகள் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டு இருந்ததால் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் அஞ்சலி செலுத்த பொதுநல அமைப்பினருக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

mettupalayam

மேலும், தடையை மீறி அஞ்சலி செலுத்தாமல் இருக்க நடூர் ஏ.டி.காலனி,  மேட்டுப்பாளையம் அன்னுர் சாலை, கோவை சாலை,  பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் வஜ்ரா வாகனங்களும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் தடையை மீறி திரண்ட திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டடோர் அங்கிருந்து நடூர் ஏ.டி.காலனி நோக்கி ஊர்வலமாக சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டனர். இதனை அடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து, அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.