கயத்தாறு அருகே மாடு மேய்க்க சென்ற இளம்பெண் மர்ம மரணம்!

 
dead

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாடு மேய்க்க சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. தொழிலாளி. இவரது மனைவி ஜோதியம்மாள் (25). மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி வழக்கம்போல் கயத்தாறு - புதுக்கோட்டை சாலையில் மாடுகளை மேய்க்க சென்றிருந்தார். அப்போது, பன்னீர்குளம் வடக்கு மயிலோடை சாலையின் ஓரத்தில்  தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஜோதியம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

tuticorin

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீசார், ஜோதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜோதியம்மாள் வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உடற்கூறாய்வு முடிந்து நேற்று ஜோதியம்மாளின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஜோதியம்மாளின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய கோரியும், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் நுற்றுக்கும் மேற்பட்டோர் சடலத்துடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தார் வட்டாட்சியர் பேச்சிமுத்து, டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.