விளாத்திகுளம் அருகே மர்ம காய்ச்சலால் 3 வயது சிறுமி பலி... கிராம மக்கள் அச்சம்!

 
vilathikulam

விளாத்திகுளம் அருகே மர்ம காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மேலும் 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டிய ராஜன் - ஆறுமுகத்தாய் தம்பதியினர். இவர்களது மகள் சிவானி (3). சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து, பெற்றோர் அவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிவானி உடல்நலம் பெறவில்லை. இந்த நிலையில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை புதூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். 

dead body

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று காட்டியபோது சிவானியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மர்ம காய்ச்சல் காரணமாக சிறுமி இறந்த சம்பவம் இந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு இதேபோன்று மர்மக் காய்ச்சல் இருந்து வருவதாகவும், அதில் சிலருக்கு குணமான நிலையில் சிவானி உயிரிழந்துள்ளார். 

சங்கரலிங்கபுரம் கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டி உள்ள அந்த பகுதி பொதுமக்கள், சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.