குமரி அருகே பிரசவத்தின்போது செவிலியர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

 
dead

கன்னியாகுமரி அருகே பிரவசத்தின்போது  அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்துள்ள கண்ணுமாமூடு செறுகுளங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்ராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தினிமோள்(28). இவர் திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் லயநிலா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், தினிமோள் மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

kumari

அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, தினிமோளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த பாறாசாலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தினிமோள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தினிமோளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆட்சியர் அலர்மேலு மங்கை விசாரணை நடத்தி வருகிறார். பிரசவமான சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.