மேட்டூர் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி மூதாட்டி பலி!

 
accident accident

சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற மூதாட்டியின் மீது அரசுப்பேருந்து மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள சின்ன மேட்டூரை சேர்ந்தவர் குஞ்சாயி (80). இவர் வீட்டில் துளசி மாலைகள் கட்டி, மேட்டூர் பகுதியில் உள்ள பூக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மேட்டூரில் உள்ள கடைகளுக்கு சென்று துளசி மாலைகளை கொடுத்த மூதாட்டி குஞ்சாயி, பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக மேட்டூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராத விதமாக மூதாட்டி குஞ்சாயி மீது மோதியது. 

mettur

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மூதாட்டி குஞ்சாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குஞ்சாயின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அரசுப்பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.