ஊட்டி முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினரின் மொற்பர்த் பண்டிகை... பாரம்பரிய நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்!

 
toda

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்தில் தோடர் இன பழங்குடி மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆடல், பாடலுடன் மொற்பர்த் பண்டிகையை கொண்டாடினர். 

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி தோடர், தோத்தர், குரும்பர், பனியர் உள்ளிட்ட பல்வேறு ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்களது தலைமை இடமாக முத்தநாடு மந்து கருதப்படுகிறது. இங்கு மாவட்டம் முழுவதும் 72 மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்றுகூடி ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயம் செழிக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகளை வன விலங்குகளிடம் இருந்து காத்திடவும் மொற்பர்த் என்று அழைக்கப்படும் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

toda

அதன்படி, நடப்பாண்டில் ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகையை நேற்று தோடர் இன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த பண்டிகையை ஒட்டி, தோடர் இன ஆண்கள் விரதம் இருந்து, பாரம்பரிய உடைகள் அணின்து முன்போ என்ற கோவிலில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோவிலில் இருந்து ஊர்வலமாக அடையாள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தரையை நோக்கி குனிந்து வழிபட்டனர். பின்னர், மீண்டும் முன்போ கோவிலுக்கு சென்று பூசாரி மூலம் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவராக காணிக்கை மற்றும் நேர்த்தக்கடனை செலுத்தினர். 

பின்னர், மூன்போ கோவிலின் முன்பகுதியில் சுற்றி நின்றபடி தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் தோடர் இன மக்கள் விரதத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமன இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு இளவட்டக்கல்லை தூக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.