நாகையில் 29 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 சுவாமி சிலைகள் மீட்பு... தனிப்படை போலீசாருக்கு டிஜிபி பாராட்டு!

 
idol theft

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சுவாமி சிலைகளை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 1992அம் ஆண்டு நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள  சின்னாசி பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர அம்மன் உலோக சிலை மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளிட்டவை மாயமானது. இதுதொடர்பாக திட்டச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1993 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

idol theft

திட்டச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகள் மாயமானதால், கோவில் அர்ச்சகரிடம் புதிதாக புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது 29  ஆண்டுகளுக்கு முன்பு சன்னாசி பனங்குடி தாளரணேஸ்வரர் கோவிலில் மாயமான ஆடிப்பூர அம்மன உலோக சிலை மற்றும் அந்த கோவிலில் வழிபாட்டில் இருந்த  விநாயகர் உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, அந்த சிலைகளை நேற்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சிலைகளை மீட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலிசாருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.