லாரி உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது!

 
arrest

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் லாரி உரிமையாளரிடம் ரூ.25ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். லாரி உரிமையாளர். இவர் அந்த பகுதியில் சரளை கல் ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் செந்தில்குமார் (38) என்பவர், தனது வரம்புக்குட்பட்ட பகுதியில் சரளை கற்களை ஏற்றிச் செல்வதற்கும், இதுகுறித்து வட்டாட்சியருக்கு பாதகமான அறிக்கை சமர்ப்பிக்காமல் இருக்கவும் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கூறியுள்ளார்.

tiruppur

முருகேசன் கேட்டுக்கொண்டதன் பேரில், பின்னர் அதனை ரூ.25 ஆயிரமாக குறைத்து கொண்டுள்ளார். இதனிடையே, லஞ்சம் தர விரும்பாத முருகேசன், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை நேற்று முருகேசன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.