மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்... தேரை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு!

 
rockfort

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென் கயிலாயம் என்றும், 274 சைவ தலங்களுள் ஈடுஇணையற்றதாகவும் போற்றப்படும் சிறப்புக்குரியது திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில். இந்த கோவில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் அம்பாளும், சிவபெருமானும் காமதேனு, அன்னம், ரிஷபம், தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 

rockfort

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி செட்டிபெண்ணுககு மருத்துவம் பார்க்கும் நிகழ்வுவும், 10ஆம் தேதி அன்று திருக்கல்யாண வைபமும் நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி, தாயுமானவ சுவாமி, அம்பாள் முலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். சரியாக காலை 6.13 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய, நமச்சிவாய என கோஷமிட்டபடி, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். 

rockfort

நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து, பின்னர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்கோட்டை பகுதியில் பகல் 12 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை  தொடர்ந்து, நாளை காலை நடராஜர் தரிசனமும், பகலில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.