போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ரூ.5 லட்சம் மோசடி - மூவர் கைது!

 
gold

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் போலி தங்கக்கட்டியை கொடுத்து தம்பதியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 20ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், தங்களிடம் 2 கிலோ எடையிலான தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு 15 லட்சம் என்றும், தங்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு தருவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும், தங்க கட்டி வேண்டுமெனில்  கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்துக்கு வரும்படி கூறி உள்ளனர்.  இதனை நம்பி ஷேக் அலாவுதீன், அவரது மனைவி நெசிலா ஆகியோர் ரூ.5 லட்சம் பணத்துடன் இரவு 9 மணிக்கு கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்றுள்ளனர். 

coimbatore

அங்கு நின்றிருந்த 3 பேரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 2 கிலோ தங்க கட்டியை வாங்கி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று அந்த தங்க கட்டியை சோதனை செய்தபோது அது தங்கமுலாம் பூசப்பட்ட உலோக கட்டி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் அலாவுதீன்,  இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில்,  ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்டோர் அங்கிய தனிப்படை அமைத்து, போலி தங்க கட்டியை கொடுத்து மோசடி செய்தவர்களை தேடி வந்தனர். 

gold

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி - ஆழியாறு சாலையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய விதமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த  நிஜம் என்கிற சின்னப்பா,  குளேஸ்வரன்பட்டியை சேர்ந்த உசேன் அலி மற்றும் ஆனைமலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், அவர்கள் ஷேக் அலாவுதினிடம் போலி தங்ககட்டியை கொடுத்து ரூ.5 மோசடி செய்த கும்பல் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான மூவரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.