தடைசெய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்கள் விற்பனை... ஈரோட்டில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!

 
erode corporation

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தில்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இதனால், அதிகாரிகள் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 

erode

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 மண்டலத்தில் அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சென்று சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஈரோடு மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உட்பட்ட பவானி ரோடு பகுதி முழுவதும் உள்ள டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

இந்த ஆய்வின்போது, சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த 4 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, சித்தோடு பகுதியில் உள்ள கடைகளையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், மணிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.